பரபரப்பான சூழலில் தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்…

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர்‌ எல்.முருகனை சந்தித்த நிலையில், இன்று திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Banwarilal Purohit

சமீபத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முடிவெடுக்க காலதாமதம் செய்தது மற்றும் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளாக கவர்னர் முடிவெடுக்காமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் கடுமையான அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில், தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததையடுத்து, ஆளுநர் இட ஒதுக்கீட்டிற்கு கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், நேற்றைய தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பா.ஜ.க. தலைவர்‌ எல்.முருகன் சந்தித்த நிலையில், இன்று காலை விமானம் மூலம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் இருந்து டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பயணத்தின் மூலம், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், வரும் வெள்ளிக்கிழமை வரை ஆளுநர் டெல்லியில் தங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version