ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகியதால் அவரிடம் இருந்த உணவு பதப்படுத்துதல் தொழில் துறையானது மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள விவசாயிகள் தொடர்பான அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி மசோதா, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் ஆதரவுகளும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஆளும் பா.ஜ.க கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலி தளம் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களுக்கு பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மக்களவையில் நேற்று பேசிய அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று திடீரென்று அறிவித்தார். ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினாலும் மத்திய அரசுக்கு சிரோமணி அகாலி தளத்தின் ஆதரவு தொடரும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து ஹர்சிம்ரத் கவுர் தனது ட்விட்டர் பதிவில், விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், விவசாயிகள் மகளாகவும், சகோதரியாகவும் இருப்பதில் தான் பெருமை கொள்வதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஹர்சிம்ரத் கவுர் பாதல் வசம் இருந்த உணவு பதப்படுத்துதல் தொழில் துறையை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூடுதல் பொறுப்பாக கவனிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.