விவசாயிகளுடன் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி:14 வது நாளாக இன்றும் தொடரும் போராட்டம்

விவசாயிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதா சட்டங்களையும் எதிர்த்து,டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி புராரி மைதானம்,மற்றும் எல்லை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடைபெறும் இந்த போராட்டம் கடும் குளிரையும் பாராமல் வேளாண் மசோதா சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய அமைப்பினருடன் ஏற்கனவே 5 சுற்று பேச்சுவார்த்தையை நடத்தியும்,அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.6 ம் சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்பொழுது மத்திய அரசு தரப்பில்,வேளாண் மசோதாக்களில் சில திருத்தங்களை மட்டுமே கொண்டுவர முடியும் என்று கூறப்பட்டது.ஆனால், விவசாய சங்க பிரதிநிதிகள் 3 வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாக திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.வேளாண் அமைச்சருடன் இன்று நடக்க இருந்த 6 ம் சுற்று பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version