பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பதவியேற்கிறார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இதுகுறித்து நிதிஷ்குமார் தெரிவிக்கையில், “எங்களுக்கு ஏழு கட்சிகளின் ஆதரவு உள்ளது. ஆதரவு கடிதத்தில் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர். மொத்தம் 2 சுயேச்சைகள் உள்பட 164 எம்எல்ஏக்கள் புதிய அரசுக்கு ஆதரவு அளிக்க உள்ளனர்” என்றார்.
243 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் , ஆர்ஜேடி தற்போது 79 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஜேடியு 45 சட்டமன்ற உறுப்பினர்களையும், காங்கிரஸ் 19, சிபிஐ 17 சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நிதிஷ்குமார், பீகாரில் ஆட்சியமைக்க அவர்கள் ஆதரவு அளித்ததற்காக நன்றி தெரிவித்தார்.