மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் உலகின் உயரமான தேசிய கொடிகம்பம் நிறுவப்படவுள்ளது.
மும்பை ஒர்லி பகுதியில் பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்கா உள்ளது. கடலில் அமைந்துள்ள இந்த தர்காவுக்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பிற மதங்களை சேர்ந்த மக்களும் சென்று வருகின்றனர். தற்போது, இந்த தர்காவில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஹாலி அலி தர்காவில் உயரமான கொடிகம்பம் நிறுவப்பட உள்ளதாக அதன் அறங்காவலர் சோகைல் கந்த்வானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக இருந்த போது (2014-2019) கொடிகம்பம் அமைப்பது தொடர்பாக அவரிடம் ஆலோசனை நடத்தினேன். இந்த திட்டம் அவருக்கு பிடித்து இருந்தது. நேற்று முன் தினம் இந்த திட்டத்தை நினைவுப்படுத்தினேன். அவர் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். உலகின் மிக உயரமான கொடிகம்பத்தை திறக்க பிரதமர் மோடியை அழைப்போம். தர்காவை சுற்றி கடல் உள்ளதால் அதிக தளவாடங்கள் தேவைப்படும் என்றார்.
தற்போது உலகிலேயே மிகப்பெரிய கொடிக்கம்பம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ளது.அந்த கொடிக் கம்பத்தின் உயரம் 201.952 மீட்டர் ஆகும். இதற்கு அடுத்தப்படியாக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் 171 மீட்டர் கொடிகம்பம் உள்ளது. இந்த இரண்டு கம்பங்களையும் விட உயரமான கம்பம் ஹாஜி அலி தர்காவில் நிறுவப்படவுள்ளது.