அடுத்த ரவுண்டு..பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

லடாக் எல்லையில் நடைபெற்ற இந்தியா – சீனா ராணுவ மோதலைத் தொடர்ந்து சீனாவிற்கு எதிராக வணிக ரீதியாக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் டிக்டாக் உள்பட 58-க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

அதன்பின் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் , கடந்த சில தினங்களாக மீண்டும் சீன ராணுவம் எல்லையில் அத்துமீறியுள்ளது.

இந்நிலையில், இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கட்கட், பைடு, பேஸ்-யூ(பியூட்டி ஆப்), வீ சாட், சைபர் ஹண்டர், ரைஸ் ஆப் கிங்டம்(கேம்), கேம் ஆப் சுல்தான்ஸ், லூடோ, ஸ்மார்ட் ஆப் லாக், மியூசிக் பிளேயர், பைக் ரேசிங் மோட்டோ, வி.பி.என் ஃபார் டிக்-டாக், மாஃபியா சிட்டி(கேம்), ரூல்ஸ் ஆப் சர்வைவல் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விளையாட்டு என்ற பெயரில், சிறுவர்கள், இளைஞர்களை அடிமையாக்கியதாக பப்ஜி மீது புகார் இருந்து வந்தது. மேலும், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பணம் மட்டுமின்றி உயிரையே இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version