விவசாயிகள் போராட்டத்திற்க்கு ஆதரவு .. இந்தியாவிடம் வாங்கி கட்டிக்கொண்ட கனடா பிரதமர்

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்த, கனடா பிரதமருக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் கடந்த 6 நாட்களாக பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‛அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும். போராடும் விவசாயிகள் குறித்த எங்கள் கவலைகளை இந்திய அரசுக்கு பல வழிகளில் தெரிவித்துள்ளோம். அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய நேரம் இது,’ என பேசியிருந்தார். விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் இருந்து, ட்ரூடோ முதல் தலைவராக ஆதரவு அளித்ததால், சமூக வளைதலங்களில் பலரும் இதனை பாராட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சா, டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் தெரிவித்த தவறான கருத்துக்களைக் கண்டோம். ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்களில் இவ்வித கருத்துகள் தேவையற்றது. குறிப்பாக இது, ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பானவை,’ எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனிடையே, இந்தியாவின் உள்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டீனுக்கு சிவசேனா கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்.பி.யுமான பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜஸ்டீன் ட்ரூடோ அவர்களே உங்கள் கவலைகள் எங்களை தொட்டுவிட்டது. ஆனால், இந்தியாவின் உள்விவகாரங்கள் மற்ற நாட்டு அரசியல் தீவனமல்ல. நாங்கள் மற்ற நாடுகளை மதித்து நடப்பது போல நீங்களும் மற்ற நாடுகளை மதித்து நடக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் மற்றநாடுகள் கருத்து தெரிவிப்பதற்கு முன்பே பிரச்சனையை பிரதமர் மோடி தீர்த்துவைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version