கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி சுமார் 4 மடங்கு அதிகரிப்பு; ஏற்றுமதி ரூ.39 ஆயிரம் கோடியை நெருங்கியதாக ராஜ்நாத் சிங் தகவல்
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை உற்பத்தி கடந்த பத்தாண்டுகளில் சுமார் நான்கு மடங்கு அதிகரித்து ரூ.1.80 லட்சம் கோடி அளவை எட்டியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதியும் சுமார் ரூ.39 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். ஜபல்பூரில் உள்ள Vehicle Factory-யில் ரூ.472 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள T-Series வாகன பராமரிப்பு வசதிக்கான திட்டத்திற்கு ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்.
இந்தப் புதிய வசதி ஆண்டுக்கு 80 வாகனங்களை பராமரிக்கும் திறனுடன் உருவாக்கப்பட உள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவது மற்றும் இறக்குமதி சார்பைக் குறைப்பது ஆகியவற்றுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். உள்நாட்டு தொழில்துறை திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் இந்தியாவின் தற்சார்பு இலக்கை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
