இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 69 சதவீதம் பேர் ஆண்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 37 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட, பலி எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில், கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வு அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 90 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் 40 வயதுக்கு மேலுள்ளவர்கள் எனவும், அதோடு கொரோனாவுக்கு பலியானவர்களில் பெண்களை காட்டிலும் இந்தியாவில் ஆண்களே அதிகமாக குறிப்பாக வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களில் சுமார் 69 சதவிகிதம் பேர் ஆண்கள் என தெரிய வந்துள்ளது.
இது, பெண்களின் இறப்பை காட்டிலும் இருமடங்கு அதிகமாகும். கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி வரை கொரோனாவுக்கு பலியான 56,292 பேரில் பெண்கள் 17,315 பேரும், ஆண்கள் 38,973 பேரும் இறந்துள்ளனர். ஆண்களும், வயதானவர்களுமே கொரோனாவால் அதிகமாக இறந்துள்ளனர்.
இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பெண்கள். அதேநேரத்தில் 11-20 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் சரிசமமாக உள்ளது. இந்த வயது பிரிவில் சுமார் 49 சதவீத பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கொரோனாவினால் உயிரிழப்பது குறைவாக உள்ளது. 90 வயதிற்கு மேற்பட்டவர்களில் மொத்த உயிரிழப்புகளில் வெறும் 0.5 சதவிகிதத்தினர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 3.4 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்புகளில் இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு குறைவாக இருப்பதால், அவர்கள் அதிகமாக பலியாகி உள்ள்ளனர்.