இந்தியாவின் தூய்மையான நகரங்களுக்கான பட்டியலில், தொடர்ந்து 4-வது முறையாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர், முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவை தூய்மைப்படுத்தும் நோக்கில், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வருடந்தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் மற்றும் மாநிலங்கள் குறித்தப் பட்டியலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று வெளியிட்டார்.
அதில், இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரமாக மத்திய பிரதேச மாநிலத்தின், இந்தூர் நகரம் தேர்வு செய்யப்பட்டு, 4-வது முறையாக மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் குஜராத் மாநிலத்தின் சூரத் 2-வது இடத்தையும், மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பை 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
100-க்கும் குறைவான ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உள்ள மாநிலங்கள் பிரிவில், தூய்மையான மாநிலமாக ஜார்கண்ட் முதலிடத்தை பிடித்துள்ளது. தூய்மையான மாநிலங்கள் பட்டியலில் சத்தீஸ்கர் மாநிலம் இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.
அதேபோல் நாட்டின் தூய்மையான ராணுவக் குடியிருப்பு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரும், தூய்மையான கங்கை நதி நகரமாக வாரணாசியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுக்குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‟இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் நான்காவது முறை தேர்வாகியுள்ளது. அந்த நகரம் தூய்மைக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. இந்த சிறப்பான பங்களிப்புக்காக மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, பட்டியல் வெளியிடப்படுவது, இது 5-வது முறையாகும். முதன்முறையாக 2016-ஆம் ஆண்டு இந்தியாவின் தூய்மையான நகரத்திற்கான விருதை கர்நாடகா மாநிலத்தின் மைசூரு வென்றது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, தற்போது தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்தூர் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக (2017,2018,2019) ஆண்டுகளில் தூய்மையான நகரத்திற்கான விருதை இந்தூர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் பட்டியலில், தமிழகத்தின் கோவை நகரம் 40-வது இடத்தையும், மதுரை 42-வது இடத்தையும், சென்னை 45-வது இடத்தையும் பிடித்துள்ளது.