
பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிரட்டல் விடுத்த வழக்கில் நடிகர் திலீப்பிடம் கேரள உயர்நீதிமன்றம் நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளது.
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை ஒருவரை காரில் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், விசாரணை அதிகாரியை கொல்லை முயன்றதாக நடிகர் திலீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுதொடர்பான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் திலீப் கடந்தாண்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதை தொடர்ந்து இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை கலைக்க முயன்றதாக நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனிடம் கொச்சி குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தியது.
தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டுவிட்டது. அதேபோல நடிகர் திலீப் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு நிறைவடைந்துள்ளது. அதன்படி இன்னும் ஒருவார காலத்தில், இந்த விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வழங்கும் என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.