ஊரடங்கு: 3 மாதத்தில் 350 ஆன்லைன் கோர்ஸ்..கேரள பெண்ணின் உலக சாதனை

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஊரடங்கு சமயத்தில், 350 ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்து அசத்தியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் 6 மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் புத்தக படிப்பை தவிர்த்து, வீடுகளில் இருந்தவாறு திறன்சார்ந்த மற்ற செயல்களில் அதிகளவில் ஈடுபட தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஆன்லைன் உதவியுடன் இளைஞர் சமுதாயம் பல்வேறு குறுகிய கால பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.


அந்தவகையில் கேரளாவை சேர்ந்த இளம்பெண், ஊரடங்கு சமயத்தில் 350 விதமான ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்துள்ளார். அவரின் இந்த முயற்சி யூனிவர்சல் போரம் ரிகார்ட் எனும் அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

கொச்சி மாவட்டம் எலமக்கரா பகுதியை சேர்ந்த ரகுநாத் மற்றும் கலாதேவி ஆகியோரின் மகள் ஆரத்தி. வேதியியல் பாடப்பிரிவில் இராண்டாம் ஆண்டு முதுகலை பட்டம் பயின்று வரும் இவர் கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 350 ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்து தனது நேரத்தை பயனுள்ள விதமாக கழிக்கும் வகையில்
மாற்றியுள்ளார்.

இது குறித்து தொடர்பாக அவர் பேசுகையில் ” எனது கல்லூரி ஆசிரியர் ஒருவர்தான் எனக்கு ஆன்லைன் படிப்பு உலகத்தை அறிமுகப்படுத்தினார். அங்கு அதிகமான படிப்புகள் உள்ளன. அவை காலநேரத்திலும், பாடத்திட்டத்திலும் வேறு பட்டு காணப்படுகின்றன. எனது கல்லூரி தலைமை ஆசிரியர் அஜிம்ஸ் பி முஹம்மது, ஆசிரியர் நீலீமா மற்றும் ஆன்லைன் படிப்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஹனிவ்வா ஆகியோர் எனக்கு உதவிகரமாக இருந்தனர் என்கிறார்.

உலகின் முன்னணி பல்கலைகழகங்களில் ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்திருக்கும் ஆரத்தியை நினைத்து பெருமிதம் கொள்வதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version