கேரள விமான விபத்து : மத்தியமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில், விமானி உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மத்தியமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.

துபாயில் இருந்து 191 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு விமானநிலையம் வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது, திடீரென்று பைலட்டின் கட்டுப்பாட்டை  இழந்து, ஓடுதளத்தில் இருந்து விலகி சென்று சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், விமானம் இரண்டாக பிளந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக விமானம் தீ பிடிக்கவில்லை. இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகள், 2 பைலட் உட்பட 5 ஊழியர்கள்  என 191 பேர் இருந்த நிலையில், 19 பயணிகள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இறந்தவர்களில், விமான ஓட்டுனரும் ஒருவர் ஆவார்.இவரின் சாமர்த்தியத்தாலேயே பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், விமான விபத்து ஏற்பட்ட கோழிக்கோடு விமான நிலையத்திற்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். அதில், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று  அவர் அறிவித்துள்ளார்.

Exit mobile version