ஆசையாக வாங்கி ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்துக்கு அருகேவுள்ளது செருவத்தூர். இங்குள்ள பேருந்து நிலையத்துக்கு அருகே ஒரு உணவகம் அமைந்துள்ளது. பேருந்துக்காக வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அங்கு சாப்பிட்டுச் செல்வது வழக்கம்.
கடந்த வெள்ளிக்கிழமை அந்த கடையில் ஷவர்மா சாப்பிட்ட 15 பேர் உடல்நிலை சரியில்லாமல் போனது. மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள், ஒரு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மாணவர்கள் சாப்பிட்ட ஷவர்மா ஃபுட் பாய்சனாக மாறியது தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட உணவகத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதனிடையே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்துக்கு சென்று மாதிரிகளை சேகரித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.