கேரளாவில் அணைகள் நிரம்பியதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு… ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்…

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மாநிலத்தின் பாதிப்புகள்

வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.ஆலப்புழாவில் இருந்து செங்கனச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.இதையடுத்து வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து 4 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கோட்டயத்தில் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

ஓடும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார் ஒன்றை பேரிடர் மீட்புப் படையினர் போராடி மீட்டனர்.இருப்பினும், காரை ஓட்டிச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், சபரிமலை பகுதியில் உள்ள பம்பை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீடிப்பதால், 6 மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், பம்பை ஆற்றின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாகவும், கோட்டயம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தாழ்வான இடங்களில் உள்ள மக்களை மீட்க கொல்லத்தில் இருந்து வள்ளங்களுடன் மீனவர்கள் விரைந்துள்ளனர்.

இதனிடையே, காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version