மும்பை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று (அக்டோபர் 20) இந்தியா வருகிறார். மும்பையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்திக்கும் அவர், இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம், எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
வெளியிடப்பட்ட பயண அட்டவணையின்படி, ரூபியோ இன்று பிற்பகல் 2:15 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறார். தொடர்ந்து, தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலில் உள்ள நினைவிடத்தில் பிற்பகல் 3:40 மணிக்கு பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.
பிற்பகலில் ஜெய்சங்கருடன் சந்திப்பு
அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, பிற்பகல் 3:50 மணிக்கு ஜெய்சங்கருடன் ரூபியோ இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பொருளாதார ஒத்துழைப்பு, இருநாட்டு உறவு மற்றும் பிராந்திய நிலைத்தன்மை உள்ளிட்ட விவகாரங்கள் இந்தச் சந்திப்பில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலையில் மும்பை ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறும் ‘Freedom 250’ வரவேற்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார். மும்பை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை (அக்டோபர் 21) காலை குஜராத்தின் ஜாம்நகருக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்
இந்தியா வருகைக்கு முன்னதாக உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் செய்தியாளர்களிடம் பேசிய ரூபியோ, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்ய முயன்று வருவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நிறைவடைவதற்கு நெருக்கமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் எரிசக்தித் தேவைகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்தப் பின்னணியில் நடைபெறும் ஜெய்சங்கர்–ரூபியோ சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும், வர்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டதாகவோ, இந்தப் பயணத்தில் கையெழுத்தாகும் எனவோ இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
