பணம் கேட்டு தராததால் சென்னையில் கடற்படை அதிகாரி கடத்திக் கொலை

சென்னையில் கடற்படை அதிகாரியைக் கடத்தி மும்பைக்குக் கொண்டு சென்று உயிரோடு தீவைத்து எரித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் உள்ள கடற்படைப் பயிற்சி மையமான ஐஎன்எஸ் அக்ராணியில் பணியாற்றியவர் சூரஜ் குமார் துபே. இவர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு ராஞ்சியில் இருந்து விமானத்தில் ஜனவரி முப்பதாம் நாள் சென்னைக்குத் திரும்பினார். விமான நிலையத்துக்கு வெளியே வந்தபோது இரவு 9 மணியளவில் துப்பாக்கி முனையில் அவர் கடத்தப்பட்டார். 3 பேர் சூரஜை சென்னையில் ஓர் அறையில் 3 நாட்கள் அடைத்து வைத்துப் பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதன்பின் மும்பை அருகே உள்ள பால்கருக்குக் கடத்திச் சென்றுள்ளனர்.ஆனால் அவரது குடும்பத்தினர்  பணம் கொடுக்க மறுத்ததால் கைகால்களைக் கட்டிக் காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று உயிரோடு தீவைத்துள்ளனர். அவரது அலறலைக் கேட்ட அப்பகுதி மக்கள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால் உடல் முற்றிலும் எரிந்ததால் சூரஜ் பரிதாபமாக உயிரிழந்தார். சாகும் முன் இதுபற்றி அவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாகக் கொலை, பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து கடத்தியவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version