காப்பகத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க NCPCR அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 2.56 லட்சம் குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குடும்ப வறுமை, சூழ்நிலை என பல்வேறு தரப்பட்ட காரணங்களால் நாடு முழுவதும் 2.56 லட்சம் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவற்றில் தமிழகம் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மகாராஷ்டிரா, மேகாலயா, மற்றும் மிசோரம் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் சுமார் 1.84 லட்சம் குழந்தைகள் காப்பகங்களில் வசிக்கின்றனர்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இந்த குழந்தைகளை உடனடியாக மீட்டு அவர்களுடைய குடும்பங்களோடு சேர்க்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வறுமையை காரணம் காட்டி ஒரு குழந்தையை குடும்பத்திலிருந்து பிரிப்பது மிகவும் தவறான விஷயம், இது அந்த மாநிலத்தின் தோல்வியையே குறிக்கிறது. குழந்தையை தங்களோடு வைத்து பராமரிக்கும் அளவுக்கு அந்த குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டியது அந்த மாநில அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளது. காப்பகத்தில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இருக்கும் காரணத்தினால் சம்மந்தப்பட்ட எட்டு மாநிலங்களும் நூறு நாட்களுக்குள் இந்த பணியை செய்து முடிக்க வேண்டும் என்று அந்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 தென் மாநிலங்கள் ஆணையத்தின் சார்பில் பல அமர்வில் கலந்து கொண்டு பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு அளித்து, குழந்தைகள் காப்பகங்களில் நேரடி ஆய்வு செய்ததின் பயனில் இன்று இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரித்துள்ளது.

Exit mobile version