ஏலம் விடப்பட்ட நீரவ் மோடியின் சொத்துகள் – ரூ.24 கோடியை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டிற்க்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியின் சொத்துகளை ஏலம் விட்டதில், ரூ.24.33 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு (பி.என்.பி.) கிடைத்துள்ளது.

போலியான ஆவணங்கள் மூலம் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில், நாட்டைவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்குச் சொந்தமாக அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களின் சொத்துகளை ஏலம்விட்டு, ரூ.24 கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கி மீட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி அவரது உறவினர் மெஹுல் சோக்சியுடன் இணைந்து, போலியான ஆவணங்களைக் காட்டி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில், சுமார் ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல், கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, நாட்டைவிட்டே தப்பியோடி, தலைமறைவாக இருந்தார். பின்னர் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நீரவ் மோடிக்குச் சொந்தமான நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்ய வேண்டுமென்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள திவால் நடவடிக்கை நீதிமன்றத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறையிட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், சொத்துகளை விற்க அனுமதி வழங்கியது. அவ்வாறு விற்பனை செய்ததின் மூலமாக, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.24.33 கோடி கிடைத்துள்ளது.

இதுதொடா்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி, பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்திடம் தெரிவித்ததாவது, நீரவ் மோடியின் நிறுவன சொத்துகளை விற்பனை செய்ததின் மூலமாக மொத்தம் ரூ.82.66 கோடி கிடைத்துள்ளது எனவும், இது பி.என்.பி. உள்பட, நீரவ் மோடிக்கு கடன் கொடுத்து மோசடிக்கு ஆளானவர்களுக்கு வழங்கப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அதில் ரூ.24.33 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Exit mobile version