பேராசிரயர் பணிகளுக்கான நெட் தேர்வுகள் வருகிற நவம்பர் 19-ந் தேதி தொடங்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு எனப்படும் நெட் தேர்வு ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும்.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக ஜூன் மாதம் நடைபெற வேண்டிய நெட் தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா தொற்று குறையாத காரணத்தால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, நெட் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக என்.டி.ஏ. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கருத்துருவை ஏற்று, ”தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. நெட் தேர்வுகள் வருகிற நவம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கப்படும். பாடவாரியான அட்டவணை நேர அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் குறித்து விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு: ugcnet.nta.nic.in இணையதளத்தை அணுக வேண்டும்.