புதிய பாடத்திட்டம்… அதே நீட் தேர்வு… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!!

சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் புதிய பாத்திட்டம் வரும் 2022-23 கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

டெல்லி, மருத்துவ சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புக்கான நீட் தேர்வு நவம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில் தேர்வுக்கான பாட திட்டம் இறுதி நேரத்தில் ( ஆகஸ்ட் ) மாற்றப்பட்டது.

அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ மாணவர்கள் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைப்பதாக நேற்றைய தினம் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மீது நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்து இருந்தது.

குறிப்பாக நேற்றைய தினம் வழக்கு விசாரணையின் போது, நாட்டில் மருத்துவ படிப்புகள் வணிக மயமாகி விட்டது எனவும் நவம்பர் மாதம் நடைபெறும் நீட் தேர்வுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பாடத்திட்டங்களை மாற்றபட்டுள்ளது!

அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் மனு தாக்கல் செய்தவுடன் தேர்வை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கிறீர்கள். இந்த செயல் நாட்டில் மருத்துவ படிப்புக்கு நல்லதாக தெரியவில்லை எனவும் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மருத்துவ மாணவர்களை கால்பந்தை போல கருதாதீர்கள்!! என நீதிபதிகள் அதிருப்தியும் வேதனையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வழக்கு மீண்டும் இன்றைய தினம் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மருத்துவ சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புகளுக்கான நடப்பு கல்வியாண்டு நீட் தேர்வானது பழைய பாட திட்டத்தின் படியே நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் புதிய பாட திட்டத்தின் படி சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டு (2022-23) முதல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். மத்திய அரசின் பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Exit mobile version