புறப்பட தயாராகும் அடுத்த பேட்ச் ரபேல் விமானங்கள்.. வலுவடையும் இந்திய வான்படை

ரபேல் விமானங்களின் அடுத்த பேட்சில், நான்கு விமானங்கள் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப்படையை வலிமையாக்கும் விதமாக, கடந்த 2016ம் ஆண்டு பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் விமானங்களை வாங்குவதற்காக ஒப்பந்த மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அந்த ஒப்பந்தத்தின் மூலம்,
36 ரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக 5 ரபேல் விமானங்கள் கடந்த ஜூலை 29 ஆம் தேதி அம்பாலா வந்தடைந்து. தொடர்ந்து, செப்டம்பர் 10 ஆம் தேதி விமானப்படையில் இணைக்கப்பட்டன. இந்த சூழலில், இரண்டாவது கட்டமாக மூன்று அல்லது நான்கு ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு சில வாரங்களில் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

பேட்ச் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் 3 அல்லது 4 விமானங்கள் எனும் விகிதத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லா விமானங்களும் இந்தியாவிற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான நிலைமையை அறிய, விமானப்படை அதிகாரிகள் குழு பிரான்ஸ் சென்றுள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தான் மற்றும் லடாக் எல்லையில் சீனா என இருபக்கங்களிலும் பதற்றம் நீடிக்கும் நிலையில் ரபேல் விமானங்களின் வருகை விமானப்படையின் வலிமையையும், போர்த்திறனையும் பலமடங்கு அதிகரிக்கும்.

இதில் உள்ள பல முக்கிய பாதுகாப்பு அமசங்கள், எதிரிநாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இடம்பெற்றுள்ளன. வானில் இருந்தவாறு வான் மற்றும் தரையில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்தலாம். பார்வைக்கு அப்பாற்பட்ட இலக்குகளையும் குறிவைத்து தாக்க முடியும் என்பதோடு, தரையில் இருந்தும் கப்பலில் இருந்தும் பறந்துயரும் திறனுள்ள ரபேல் அணு ஆயுதங்கள் உள்பட 10 டன் ஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்டுள்ளது.

ரேடார் எச்சரிக்கை கருவிகள், 10 மணி நேரத்திற்கும் அதிகமாக டேட்டாக்களை சேகரித்து வைக்கும் வசதி. இன்ஃபரா ரெட் சர்ச், டிராக் சிஸ்டம், கோல்டு எஞ்சின் ஸ்டார்ட், ஏவுகணை எதிர்ப்புத் திறன், மலைப்பாங்கான தளங்களில் இருந்து இயக்கும் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் ரபேலில் உள்ளன.

Exit mobile version