முன்பதிவில் மோசடி: கட்டணம் செலுத்தி ஐயப்ப பக்தர்கள் ஏமாற வேண்டாம் – சபரிமலை தேவஸ்தானம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் பதிவுக்கு கட்டணம் இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா முன்னெச்சரிக்கையாக, பக்தர்கள் தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக, ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே, சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், முன்பதிவில் மோசடி நடப்பதாகவும், பொதுமக்கள் மோசடிக்காரர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேவஸ்தானம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி வருபவர்கள், கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் கொண்டு வர வேண்டும். அந்த சான்றிதழ் தரிசனத்திற்கு, 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

தாமதமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கும், உடல் நலம் குன்றிய பக்தர்களுக்கும் நிலக்கல்லில் குறைந்த கட்டணமான ரூ.625-ல் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும். அதேசமயம், ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி வரை 86 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில், சபரிமலை தரிசனத்திற்கு தற்போதும் ஆன்லைன் முன்பதிவு நடைபெறுவதாகவும், அதற்கு முன்பதிவு மையங்கள் மற்றும் கணினி மையங்களில் ஒருவருக்கு ரூ.3, 500 முதல் ரூ.5,000 வரை கட்டணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

முன்பதிவு, கொரோனா பரிசோதனை, பிரசாதம் ஆகியவற்றிற்கான கட்டணம் என கூறி பணத்தை வசூலிப்பதாக தெரிய வந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. இந்த சேவையினை இலவசமாகவே வழங்கி வருகிறோம். எனவே பக்தர்கள் பணத்தை கொடுத்து வீணாக ஏமாற வேண்டாம், என தேவஸ்தான தலைவர் வாசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version