தமிழக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கொட்டிக் கிடைக்கும் கிரிமினல் வழக்குகள்.. உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை

நாடு முழுவதும் உள்ள எம்பி, எம்.எல்.ஏக்கள் மீது மொத்தம் 4,859 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதிர்ச்சிகரமான அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அரசால் தடை விதிக்கப்படுகிறது. ஆனால், கிரிமினல் குற்ற வழக்கில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறபோது, தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும் என்பதால், அப்படிப் பட்டவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒருசில வழிகாட்டுதல்களை வழங்க, அதனை அடிப்படையாக கொண்டு தலைமை தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 11ம் தேதி புதிய விதிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதில்,தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னனி என்ன என்பது குறித்து அனைத்து விவரங்களையும் தேர்தலுக்கு முன்னதாக மூன்று முறை அக்கட்சியின் சார்பாக விளம்பரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாடு முழுவதும் உள்ள எம்.பி., மற்றும் எ.எல்.ஏக்கள்., மீதான குற்ற வழக்குகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை நியமித்து அதுகுறித்த அறிக்கை சமர்பிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,நாடு முழுவதும் எம்பி, எம்.எல்.ஏக்கள் மீது மொத்தம் 4,859 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் தான் 1,374 வழக்குகள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் இந்த அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது. இதில் தமிழகத்தை பொருத்தவரையில் எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது மட்டும் சுமார் 361 வழக்குகள் நிலுவையில் உள்ளது என வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version