பெட்ரோல், டீசலுக்கு வரம்பா? அரசு எச்சரிக்கை!

புதுடெல்லி: தனியார் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல், டீசலின் அளவுக்கு தன்னிச்சையாக உச்சவரம்பு விதிப்பதை ஏற்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

சில பகுதிகளில் ஜியோ–பிபி, நயாரா எனர்ஜி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் பெட்ரோல் நிலையங்களில் டீசல் விற்பனைக்கு வரம்பு விதிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், “எரிபொருள் விற்பனைக்கு யாரும் தன்னிச்சையாக உச்சவரம்பு விதிக்க அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு வரம்பு விதிக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் அரசு விளக்கம் கேட்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்களிடம் தெரிவிப்போம்” என்றார்.

வரம்பு விதிக்கப்படுவது ஏன்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், சில்லறை விலையில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்வதால் இழப்பு ஏற்படுவதாக தனியார் எரிபொருள் நிறுவனங்கள் கூறுகின்றன. சில்லறை விலைக்கும் மொத்த விற்பனை விலைக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதால், வணிகப் பயன்பாட்டாளர்கள் பெட்ரோல் நிலையங்களில் அதிக அளவில் டீசல் வாங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சில தனியார் பெட்ரோல் நிலையங்களில் ஒரு வாடிக்கையாளருக்கு நாளொன்றுக்கு 50 முதல் 200 லிட்டர் வரை மட்டுமே டீசல் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், நிறுவனங்கள் தன்னிச்சையாக விற்பனையைக் கட்டுப்படுத்துவது அரசின் கொள்கைக்கு எதிரானது என பெட்ரோலியத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

நிறுவனங்களுடன் அரசு பேச்சு

தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனங்களுடன் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். எரிபொருள் விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version