எல்லைக்கு புறப்பட்ட சக்தி வாய்ந்த சவுரியா ஏவுகணை..என்னப்பா சீனா சவுக்கியமா?..

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் சவுரியா ஏவுகணைகளை ராணுவத்தில் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா-சீனா இடையே
கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், சுமார் 5 மாதங்களாக நீடித்து வருகிறது. அமைதியை நிலைநாட்டும் நோக்கில் இருதரப்பிலும் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் கூட, இன்னமும் சீனா எல்லையில் தனது துருப்புகளை தொடர்ந்து நிலை நிறுத்தி உள்ளது. இதனால் இந்தியாவும் எல்லையில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது. ராணுவ பலத்தை காட்டும் நோக்கில் ரபேல் போர் விமானங்களை அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளதோடு, 800 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கும் நிர்பய் ஏவுகணைகளை லடாக் எல்லையில் நிறுத்தி, அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளையம் இந்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹைப்பர் சானிக் ஏவுகணையை கடந்த மாதம் 7ஆம் தேதியும், சவுரியா ஏவுகணையை கடந்த 3 ஆம் தேதியும், ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் நீரடி ஏவுகணையை கடந்த 5-ஆம் தேதியும் இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஏவி வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.
வீரம் என்ற பொருளில் அழைக்கப்படும் சவுரியா ஏவுகணை, 700 முதல் 1900 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

200 கிலோ முதல் 1 டன் வரையிலான எடை கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை ஒரு நொடியில் 2.4 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் திறன் கொண்டது. 

இந்நிலையில், எல்லையில் நிலவும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, சவுரியா ஏவுகணையை ராணுவத்தில் உடனடியாக இணைத்து கொள்ள பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த ஏவுகணையை எந்த இடத்தில் நிலை கொள்ள வைப்பது என்பதை ராணுவம் அடுத்த சில நாட்களில் முடிவு எடுக்க உள்ளது. இதனிடையே 5000 கிலோ மீட்டர் தூரம் பறந்து தாக்கும் நீரடி ஏவுகணையை உருவாக்கவும் டி.ஆர்.டி.ஓ.விற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒலியை மிஞ்சும் வேகத்தில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவும் வகையில் கே-5 என்ற அந்த ஏவுகணை, அடுத்த 15 மாதங்களில் தயாராகி விடும் என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அணுஆற்றலில் இயங்கும் ஹரிகந்த் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவும் வகையில் கே-5 ஏவுகணை வடிவமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version