பஞ்சாபில் விஷசாராய பலி எண்ணிக்கை 121 ஆக அதிகரிப்பு

பஞ்சாபில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 121 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டிருந்த இழப்பீட்டு தொகையானது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக மதுபானங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகக் கள்ளச்சாராய கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், பஞ்சாபில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி இரவில் நடந்த விஷ சாராய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதில் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.பலர் ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி அதிகளவில் உயிரிழந்தனர்.  இதன் காரணமாக, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இந்த வழக்கை மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டார். 

இந்த வழக்கில், 6 போலீசாரையும் சேர்த்து ஏழு கலால் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மற்றும் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்தும், அவர்களிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.இந்த வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தில், கடந்த 1-ஆம் தேதி வரை பலியானோர் எண்ணிக்கை 86 ஆக இருந்தது.மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பஞ்சாப் முதல்வர், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் வழக்கை விசாரிக்க சிறப்பு வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,  அதற்கான விசாரணையும் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதில் பலியானவர்களின் எண்ணிக்கையும் 121 ஆக உயர்ந்து இருக்கிறது. எனவே,  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் என்ற இழப்பீட்டு தொகையானது, ரூ.5 லட்சம் ஆக உயர்த்தி அறிவிக்கப்படுகிறது என முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

Exit mobile version