உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன சிறுமியை தேட மாற்றுத்திறனாளி தாயிடம் போலீசார் 15 ஆயிரம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கான்பூர் :
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் குடியா. கடந்த மாதம் இவரது 11 வயது மகள் காணாமல் போய்விட்டார். இதையடுத்து குடியா தனது காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை மட்டும் பதிவு செய்துகொண்ட உள்ளூர் போலீசார் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணிண் மகளை தேடுவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.
இந்தநிலையில் மகளின் நிலைமை குறித்து அறிந்துகொள்ள போலீசாரிடம் கேட்டபோது, சிறுமியைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் போலீஸ் வாகனத்திற்கு டீசல் போட பணம் தர வேண்டும் என்று அந்த மாற்றுத்திறனாளி தாயை வற்புறுத்தியுள்ளனர். மகளின் பாசத்திற்க்காக அந்த ஏழை மாற்றுத்திறனாளி இதுவரை 4 முறை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி ரூ.15 ஆயிரம் போலீசாருக்கு கொடுத்துள்ளார். இருந்தும் போலீசார் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த சிறுமியின் நடத்தை குறித்து தவறாக பேசியுள்ளனர்.
மனமுடைந்த அந்த மாற்று திறனாளி தாய் போலீசார் லஞ்சம் பெற்றதை குறித்தும், தனது மகளை தவறாக பேசியது குறித்தும் பத்திரிகையாளர்களிடம் கண்ணீர் வடித்து கதறியுள்ளார். இதனால் போலீசாரின் செய்த இந்த மோசமான செயல் வெளிச்சத்திற்கு வந்து லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய கான்பூர் மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், காணாமல் போன அந்த சிறுமியை கண்டுபிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.