ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கிறார் : பிரதமர் மோடி

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை நாட்டில் முதல் முறையாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

டெல்லி :

நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் தேவைப்படாத தானியங்கி முறையில் செயல்படும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் 28-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இத்தகைய ரயில் சேவை டெல்லியில் மெஜந்தா நிற லைன் எனப்படும் மார்க்கத்தில், அதாவது ஜனக்புரி மேற்கு பகுதியில் இருந்து தாவரவியல் பூங்கா வரையில் இருக்கும். இப்புதிய சேவையை மட்டுமின்றி அனைத்து மார்க்கத்திலும் பயணிகள் பயன்படுத்தும் வகையிலான தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்த உள்ளார். இந்த கார்டு வைத்திருப்பவர்கள் விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் சேவையை அதே நாளில் பயன்படுத்த முடியும்.

டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி டிசம்பர் 24-ம்தேதியுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகிறது. மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்பத்தின் புதிய வடிவமாக ஓட்டுநர் தேவைப்படாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில் சேவையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 37 கி.மீ. தூரம் கொண்டமெஜந்தா நிற லைன் மார்க்கம் மற்றும் பிங்க் நிற லைன் (மஜ்லிஸ் பூங்கா-ஷிவ் விஹார்) மார்க்கத்திலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

Read more – என்னை அவமானபடுத்தி ஜனநாயகம் குறித்து பாடம் கற்பிக்க விரும்புகின்றனர்- பிரதமர் மோடி பேச்சு

தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சிபிடிசி எனப்படும் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இது செயல்படுத்தப்படும். முந்தைய மெட்ரோ ரயில் மார்க்கங்களில் இயக்கப்படும் ரயில் சேவையை விட இது மிகவும் பாதுகாப்பானதாகும். மக்கள் அதிகம் பயணிக்காத நேரங்களில் சோதனை அடிப்படையில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்பட்டு பார்க்கப்பட்டது. அதேபோல சிக்னல் செயல்பாடுகளை நிபுணர் குழு ஆராய்ந்தது. மேலும் இத்தகைய ரயில் இயக்கத்தில் ஏதேனும் பிரச்சினை நிகழ்ந்தால் அதை எப்படி அணுகுவது என்பது குறித்தும் சோதித்து பார்க்கப்பட்டது.பயணிகள் அவசர காலத்தில்பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. மனிதர்கள் தேவைப்படாத வகையில் செயல்படும் விதமாக இந்த மெஜந்தா நிற மார்க்கத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சேவையுடன் தேசிய பொது போக்குவரத்து அட்டையையும் (என்சிஎம்சி) பிரதமர் தொடங்கிவைக்கிறார். டெல்லி மெட்ரோரயில் நிறுவனம் பிரத்தியேகமாக இந்த அட்டையை உருவாக்கியுள்ளது. இந்த அட்டை மூலம் பஸ்பயண கட்டணம், பிற மார்க்கங்களில் பயணிப்பது உள்ளிட்டஅனைத்தையும் மேற்கொள்ளலாம். வாகன நிறுத்துமிட கட்டணம், சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம். இந்த அட்டை மூலம் பணம் கூட ஏடிஎம்களில் எடுத்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version