நாடுமுழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமெடுத்து வருவதால் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை நடத்த இருக்கிறார்.
புதுடெல்லி :
நாடுமுழுவதும் கொரோனா பரவலின் 2 வது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் இந்த தொற்றால் 1 லட்சத்து 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் பரவலை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பிரதமர் மோடி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் இன்று மாலை 6.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அடுத்தகட்ட முயற்சிகள் மற்றும் தீவிர கட்டுப்பாடுகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள், சுகாதார செயலாளர்கள் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.