ராகுல் உள்ளிட்டோர் மனுவில் 14 குறைகள்; உச்ச நீதிமன்றப் பதிவகம் சுட்டிக்காட்டு!

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை (எஸ்ஐஆர்) தொடர்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் தாக்கல் செய்த மனுவில், 14 நடைமுறைக் குறைகளை உச்ச நீதிமன்றப் பதிவகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆவணங்கள், வழக்கறிஞர் அங்கீகாரப் பத்திரங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டணம் தொடர்பான குறைகளைச் சரிசெய்யக் கோரப்பட்டுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 11 தலைவர்கள் நேற்று (அக்டோபர் 12) இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.

ஆவணங்கள், கட்டணத்தில் குறைகள்

மனுதாரர்களில் ஒன்பது பேருக்கான வக்காலத்து ஆவணங்கள் இல்லாதது, மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டை நகல் தெளிவாக இல்லாதது ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. வக்காலத்து என்பது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராக அதிகாரம் அளிக்கும் ஆவணமாகும்.

மேலும், நீதிமன்றக் கட்டணத்தில் ₹220 குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பதிவகம் தெரிவித்துள்ளது. இணைப்பு ஆவணங்களின் தேதிகள் மற்றும் வழக்கு எண்களில் உள்ள முரண்பாடுகள், தெளிவற்ற பக்கங்கள் உள்ளிட்டவற்றையும் திருத்தக் கோரியுள்ளது.

தேர்தல் ஆணையர்களைச் சேர்த்தது குறித்து விளக்கம்

அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரைத் தனிப்பட்ட எதிர்மனுதாரர்களாகச் சேர்த்தது ஏன் என்பதற்கும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஆய்வு கோரும் மனு

எஸ்ஐஆர் நடவடிக்கையில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதும் மாற்றப்பட்டதும் குறித்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய சுயாதீனக் குழு ஆய்வு நடத்த வேண்டும் என்பது மனுவின் முக்கியக் கோரிக்கையாகும்.

வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு முன்பு அறிவிப்பும், விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

மனு தள்ளுபடி செய்யப்படவில்லை

பதிவகம் சுட்டிக்காட்டியவை மனுத் தாக்கல் நடைமுறை தொடர்பான குறைகள். மனுவின் கோரிக்கைகளை நீதிபதிகள் நிராகரித்ததாகவோ, மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவோ இதற்குப் பொருள் இல்லை. குறைகளைச் சரிசெய்து, விசாரணைக்குப் பட்டியலிடுவதற்கான நடைமுறைகளை முடிக்க வேண்டியுள்ளது.

Exit mobile version