தர்ணாவில் ஈடுபட்ட எம்.பிக்களுக்கு டீ கொண்டு வந்த மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷை இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பிக்களை இடைநீக்கம் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்தார்.
இதை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மாலை முதல் இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்தி சிலை முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட எம்.பிக்களுக்கு, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் இன்று காலை அருந்த டீ கொண்டு வந்தார். ஆனால், அவர் கொண்டு வந்த டீயை பருக மறுத்த எம்.பிக்கள், ஊடகங்களை அழைத்துக்கொண்டு விளம்பரத்திற்காக ஹரிவன்ஷ் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என விமர்சித்தனர்.
இந்த நிலையில், மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு பிரதமர் மோடி பாராட்டி தனது ட்விட்டரில் பக்கத்தில், “ தன்னை அவமதித்த எம்.பிக்களுக்கு, நேரில் சென்று டீ கொண்டு சென்ற ஹரிவன்ஷ் முன்வந்தது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. ஹரிவன்ஷை வாழ்த்துவதில்,இந்திய நாட்டு மக்களோடு நானும் இணைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.