இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி:
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று 2 முக்கிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. விவாதம் முடிந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு மையப்பகுதிக்கு வந்து, அவைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டு மாநிலங்கவை விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை கிழித்து எறிந்தனர் .
மாநிலங்களவையில் அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், குளறுபடி செய்து குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அவையை நடத்திய துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மனுவும் அளித்தனர்.
இன்று காலை மாநிலங்களவை மீண்டும் கூடியபோது, நேற்று அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 8 உறுப்பினர்களை ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் அவையை விட்டு வெளியேற மறுத்து தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் மாநிலங்கவை ஒத்திவைக்கப்பட்டதும், இடைநீக்கம் செய்யப்பட்ட 8 உறுப்பினர்கள் உள்பட, எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொடர் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.