பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களில், முதல்கட்டமாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.
இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படும் இந்த விமானங்களை, பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும்.
தாக்குதல் ரகத்தைச் சேர்ந்த இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் ஆகும். அவற்றிலும் பிற விமானங்களில் இருப்பதுபோன்ற அனைத்து அம்சங்களும் இருக்கும். இந்த 36 விமானங்களும் அடுத்த ஆண்டு (2021) இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் விதியாகும். இதில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றை முறைப்படி பெற்றுக்கொள்வதற்காக கடந்த அக்டோபரில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றிருந்தார்.
இந்த 10 விமானங்களில், 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே இருக்கும் நிலையில், மீதமுள்ள 5 விமானங்கள் முதல் பிரிவாக இந்தியா புறப்பட்டன. நேற்று முன் தினம் (ஜூலை 27) பாரீசில் இருந்து இந்தியாவை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய ரஃபேல் விமானங்கள், இந்தியா-பிரான்ஸ் இடையேயான 7 ஆயிரம் கி.மீ. தூரத்தை வெற்றிகரமாக கடந்து, இன்று பிற்பகலில் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன. இந்திய வான்பரப்புக்குள் நுழைந்ததும் சுகோய் எம் 30 ரக போர் விமானங்கள் அழைத்து வந்தன. இந்த விமானங்கள் சுமார் 3 மணியளவில் ஹரியானாவின், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் கம்பீரமாக தரையிறங்கியது. அங்கு, தரையிறங்கிய விமானங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தண்ணீர் பீய்ச்சி அடித்து ரஃபேல் போர் விமானங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஃபேல் போர் விமானங்கள் நமது ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விமானத்தின் சிறப்பம்சங்கள்
15.30மீ. நீளம், 10.90மீ. அகலம், 5.30மீ. உயரம் கொண்டது.ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 3,700 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் பெற்றது.ரஃபேல் விமானம் பறக்கும் போதே, வானிலேயே எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும்.இந்த நவீன போர் விமானங்கள் மிக முக்கியமான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்றவை. 9 டன் எடையுள்ள ஆயுதங்களை எடுத்து சென்று தாக்க முடியும்.இரட்டை இன்ஜீன் கொண்ட இந்த விமானங்களை போர்க்கப்பல்களில் எளிதாக தரையிறக்க முடியும். கடும் குளிரிலும் இயக்க முடியும்.
மேலும்,முக்கியமான ஏவுகணைகளை சுமந்து செல்வது மட்டுமின்றி, இந்தியாவுக்காக மேலும் சிறப்பான முறையில் பல மாற்றங்கள் இந்த போர் விமானத்தில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரேடார் எச்சரிக்கை வாங்கிகள், ஜாமர்கள், 10 மணிநேர விமான தரவு பதிவு, தேடுதல் மற்றும் வழிகாட்டி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த விமானங்களில் அடங்கி உள்ளன.
அம்பாலா மக்கள், இன்று இரவு 7:00 மணி முதல் 7:30 மணி வரை, வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, ரபேல் போர் விமானங்களை வரவேற்குமாறு, அம்பாலா நகர, பா.ஜ., எம்.எல்.ஏ., அசீம் கோயல், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அம்பாலாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானப்படை தளத்தின் சுற்று வட்டார பகுதிகளில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் இயக்கவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.