யார் இந்த அர்னாப் கோஸ்வாமி? இந்தியாவில் ஒரு ஊடகவியலாளர் கைது செய்யப்படுவதற்கான பின்னணி என்ன?

பிரபல தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி இன்று காலை மும்பையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அர்னாப் கோஸ்வாமி ஒரு இந்திய ஊடகவியலாளர் ஆவார். டைம்ஸ் நவ்- என்னும் முக்கிய தொலைக்காட்சி நிறுவனத்தில் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

டைம்ஸ் ஹவர் மற்றும் ஃப்ராங்க்லி ஸ்பீக்கிங் வித் அர்ணாப் போன்ற நிகழ்ச்சிகள் இவர் தொகுத்து வழங்கிய பிரபலமான நிகழ்ச்சிகள் ஆகும். தன்னுடைய ஊடக திறமைக்காக பல விருதுகளை பெற்ற இவர் காம்பேட்டிங் டெரரிசம்: தி லீகல் சேலஞ்ச் என்னும் புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

இவர் அஸ்ஸாம் மாநிலம் பார்பேட்டா கிராமத்தை சேந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலை பட்டம் பெற்று பின்பு பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டில் சமூகமானிடவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

1994ஆம் ஆண்டு தி டெலிகிராப் நாளிதழில் பணியாற்றினார். அதன் பின்பு NDTV யில் பணியாற்றினார். 2004 ல் டைம்ஸ் நவ் என்னும் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றிய இவர் 2016ஆம் ஆண்டு அதன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். அதன் பிறகு 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியில் தலைமை ஆசிரியராகவும் அதன் பங்குதாரராகவும் இருந்து வருகிறார்.

கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார், கடந்த 2018-ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டனர். இவர்கள் இருவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக ஊடகவியலாளரும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி மீது அன்வய் நாயக்கின் உறவினர் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019-ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் சேனலின் டி ஆர் பி காக சுஷாந்த் சிங்க் ராஜ்புட் மரணம் மேலும் உத்திர பிரதேசத்தில் நடந்த சாதுக்கள் கொலை ஆகிய நிகழ்வுகளில் தேவையற்ற கருத்துக்களை இந்த டிவி யில் ஒளிபரப்பியதாக ஏற்கனவே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

சாட்சிகள் எதுவும் இல்லை என்று முடித்துவைக்கப்பட்ட ஒரு வழக்கில் இவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது சற்று சந்தேகம் எழ செய்கிறது.

இதுகுறித்து, அர்னாப் கோஸ்வாமி கூறும்போது, வீட்டில் இருந்த தன்னை வலுக்கட்டாயமாக போலீசார் அழைத்துச் சென்றதாகவும், மேலும் வீட்டில் இருந்தவர்களையும் தன்னையும் போலீசார் தாக்கியதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த 2019-ஆம் ஆண்டே முடிக்கப்பட்ட இந்த வழக்கை மீண்டும் காவல்துறையினர் விசாரிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவ சேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், எந்தவித உள்நோக்கத்துடனும் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்யவில்லை என்றும், சட்டத்திற்கு உட்பட்டே அரசு இயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version