கொரோனாவையும் விட்டு வைக்காத ரிலையன்ஸ் நிறுவனம்..புதிய சோதனை கருவி அறிவிப்பு

இரண்டே மணி நேரத்தில் முடிவு தெரியக்கூடிய கொரோனா RT-PCR சோதனை கருவியை உருவாக்கி உள்ளதாக, ரிலையன்ஸ் லைஃப் சைன்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அதிகப்படியான பரிசோதனைகள் மட்டுமே அதனை கட்டுப்படுத்த முக்கிய வழியாக கருதப்படுகிறது. இதற்கு பிசிஆர் சோதனை மற்றும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் கிடைக்கப் பெறும் முடிவுகள் துல்லியமாக இருப்பதில்லை என பல தரப்பிலும் புகார்கள் எழுந்துள்ள சமயத்தில், பிசிஆர் பரிசோதனையில் முடிவுகள் வெளியாக ஒரு நாள் வரை ஆகிறது. இந்த சுழலில் விரைவாகவும், துல்லியமாகவும் முடிவுகளை வழங்க கூடியது என, ரிலையன்ஸ் லைஃப் சைன்சஸ் நிறுவனம் புதிய பிசிஆர் பரிசோதனை கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி, கொரோனா வைரசின் 100 க்கும் மேற்பட்ட மரபுக்கூறுகளை ஆராய்ந்து தனித்துவம் வாய்ந்த தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டில் இந்த கிட் உருவாக்கப்பட்டுள்ளது. 
ரிலையன்சின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் லைஃப் சைன்சஸ் இந்த கிட்டுக்கு R-Green kit  என்று பெயரிட்டுள்ளது. 

இந்த  சோதனை கிட்டுக்கு இதுவரை ஐசிஎம்ஆர் சான்று  அளிக்கப்படவில்லை என்றாலும், இது கையாளுவதற்கு மிகவும் எளிதானது என்றும்  98.8 சதவிகிதம் துல்லிய முடிவுகளை அளிக்க கூடியது என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Exit mobile version