கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி’ தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா, ராய்காட் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்வய் நாயக் என்பவர், 2018ல், தன் தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவரை, மகாராஷ்டிரா போலீசார், சமீபத்தில் கைது செய்தனர்.
இந்த வழக்கில், ஜாமின் வேண்டி , அர்னாப் உள்ளிட்ட மூவரும், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், அலிபாக் செஷன்ஸ் நீதிமன்றத்தில், அர்னாப் உள்ளிட்ட மூவரும், ஜாமின் மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றத்திலும், அவர்கள் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், அர்னாப் கோஸ்வாமியை ரூ50 ஆயிரம் பிணைத் தொகை செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது. அதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய நிதிஷ் சர்தா மற்றும் பர்வீன் ராஜேஸ் சிங் ஆகியோருக்கும் ரூ50 ஆயிரம் பிணைத் தொகை செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது.