வி.ஆா்.எஸ். மூலம் ஊழியர்களைக் குறைக்க எஸ்.பி.ஐ. திட்டம்

பாரத ஸ்டேட் வங்கி, வி.ஆா்.எஸ். மூலம் ஊழியர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. வங்கியின் செலவுகளைக் குறைக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.), விருப்ப ஓய்வுத் திட்டம் (வி.ஆா்.எஸ்.) மூலம் ஊழியர்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், வி.ஆா்.எஸ். திட்டத்துக்கான, வரைவுத் திட்டம் தயாராக உள்ளதாகவும், வங்கியின் நிர்வாகக் குழுவின் ஒப்புதல் பெற்றதும், இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன்படி, 30,190 ஊழியர்கள் வி.ஆா்.எஸ். பெறுவதற்கு தகுதியானவா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வி.ஆா்.எஸ்.-க்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு, வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் பிப்ரவரி இறுதி வரை, வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ், 25 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்தவர்கள் அல்லது 55 வயதை எட்டிய நிரந்தர ஊழியர்கள் அனைவரும், வி.ஆா்.எஸ்.பெற தகுதி உடையவா்கள் எனவும், விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் காலக் கட்டத்திற்குள், விண்ணப்பிப்பவா்களின் கோரிக்கைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம், 2.57 லட்சமாக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை, தற்போது மார்ச் 2020-ன் நிலவரப்படி, 2.49 லட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வங்கியின் செலவுகளைக் குறைக்குப்பதற்காகவும், மனித வளத்தை சிறப்பாகப் பயன்படுத்தும் முயற்சியுடனும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், வி.ஆா்.எஸ்.-க்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவா்களில், 30 சதவீதம் போ் விண்ணப்பித்தால் கூட, சுமார் ரூ.1,662.86 கோடி வங்கிக்கு மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version