இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் 90,802 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நாட்டில் மொத்த பலி எண்ணிக்கையும் 71,642 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 90,802 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,04,613 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில், பிரேசிலை முந்தி இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது .
அதேபோல, நேற்று ஒரே நாளில் மட்டும் 1,016 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதன்மூலம் நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 71,642 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், சா்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது.
இந்நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், நேற்று ஒரே நாளில் 69,563 பேராக உள்ளதால், நாட்டில் மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 32,50,429 ஆக உயர்ந்துள்ளது, சற்றே மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 77.31 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், பலியானோர் விகிதம் 1.70 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்-ன் (ஐ.சி.எம்.ஆா்.) தகவலின்படி, இதுவரையிலும் 4,95,51,507 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதில் 8,82,542 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், நேற்று ஒரே நாளில் 7,20,362 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 4,95,51,507 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று 20 லட்சத்தைக் கடந்த நிலையில், செப்டம்பர் 7-ஆம் தேதியில் 42 லட்சத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு மாத கால இடைவெளியில் மட்டும், இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.