கவனக்குறைவாக உணர்ச்சிகளை தூண்டியதற்கு வருந்துகிறோம்: தனிஷ்க் நிறுவனம் விளம்பரம் குறித்து விளக்கம்

தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரத்தை திரும்ப பெறுவதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக விளம்பரங்கள் வருகின்றன. அது போலவே தனிஷ்க் நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. இந்த விளம்பரம் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அந்த விளம்பரத்தில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாமியார் ஒருவர் இந்து மதத்தை சேர்ந்த தன் மருமகளுக்கு வளைகாப்பு நடத்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது லவ் ஜிஹாத்தை ஆதரிப்பது போல் இருக்கிறது என பலரும் எதிர்த்தனர். நடிகை கங்கனாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக ‘boycotttanishq’ என்ற ஹாஷ்டாகும் ட்ரெண்ட் ஆகியது. இந்நிலையில் தனிஷ்க் நிறுவனம் யூட்யூப் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது.

தனிஷ்க் நிறுவனம் இந்த விளம்பரத்தை நீக்கியதற்கு எம் பி சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, இந்த விளம்பரம் இந்து முஸ்லீம் ஒற்றுமையை அழகாக எடுத்துக் காட்டியுள்ளது. ஆனால் சில இந்துத்துவவாதிகள் இதை எதிர்க்கின்றனர், தனிஷ்க்கை புறக்கணிக்க அழைப்பு விடுக்கின்றன, இவர்கள் இதை புறக்கணிப்பதென்றால் உலகில் இந்து முஸ்லீம் அடையாளமாக மிக நீண்ட காலமாக எஞ்சியிருக்கும் இந்தியாவையும் புறக்கணிக்க வேண்டும்.

இந்த விளம்பரம் குறித்து தற்போது தனிஷ்க் நிறுவனம் விளக்கம் கூறியுள்ளது,

வெவ்வேறு வாழ்க்கை சூழலை கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்து கொண்டாட வேண்டும், ஒற்றுமையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கவனக் குறைவாக உணர்ச்சிகளை தூண்டியதில் நாங்கள் மிகுந்த வருத்தம் அடைகிறோம், மேலும் எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் உணர்வுகளையும் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு இந்த விளம்பரத்தை திரும்ப பெறுகிறோம் என அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version