மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் : 3 வீரர்கள் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில், பாரமுல்லா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் ஒரு காவலர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின், தின்டிம் கிராமத்தில், இன்று காலை 9.30 மணியளவில் பாதுகாப்புப் படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். 

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 3 வீரர்களும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனளிக்காமல் மூவரும் உயிரிழந்தனர்.  

இத்தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், அப்பகுதியில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 4 தினங்களில் மட்டும், காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படை மீது பயங்கரவாதிகள் நடத்தும் 2-வது தாக்குதல் இதுவாகும். கடந்த 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை, நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர்  இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version