பாகிஸ்தானில் பயிற்சி; பயங்கரவாத தாக்குதல் திட்டம் முறியடிப்பு: 6 பேர் கைது

நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 6 பேரை டெல்லி காவல் துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களில் இரண்டு பேர் பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தசரா, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சிலர் திட்டமிட்டுள்ளதாக டெல்லி காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் டெல்லி காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லியைச் சேர்ந்த தலா ஒருவரும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

22 வயது முதல் 47 வயதுடைய அவர்களிடமிருந்து 2 கையெறி குண்டுகள், ஒரு கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து மற்றும் இத்தாலியில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிமின் சகோதரரான அனீஸ் இப்ராஹீம் இந்த தாக்குதல் திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டு வந்ததாக டெல்லி காவல்துறை தெரிவிக்கிறது.

கைது செய்யப்பட்ட இரு பயங்கரவாதிகள், சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து படகு பயணம் மூலம் பாகிஸ்தானில் உள்ள தாட்டா பகுதிக்கு சென்று அங்குள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு 15 நாட்கள் பாகிஸ்தான் ராணுவ உடையில் இருந்த இருவர், பயிற்சி அளித்துள்ள அதிர்ச்சிகர தகவலும் கிடைத்துள்ளது.

கைது நடவடிக்கையால் மிகப்பெரிய சதி திட்டத்தை முறியடித்துள்ள டெல்லி காவல்துறை, இதுதொடர்பாக மேலும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Exit mobile version