முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம்: சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு

முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என்று சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சபரிமலை :

கொரோனா பரவல் காரணமாக சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றிவருகிறது.கேரளா அரசின் உத்தரவின் பெயரில் கடந்த 2 வார காலமாக சபரிமலையில் தரிசனத்திற்காக பக்தர்கள் வார நாட்களில் 2 ஆயிரம் நபர்களும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் நபர்களும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.அதிலும் பக்தர்கள் ஆன்லைனில் ஏற்கனவே முன் பதிவு செய்து இருந்தால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில்,கடந்த சில நாட்களாகவே, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய படை எடுத்து வருகின்றனர். இதனால் அவர்கள் அனைவரையும் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பி தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக,சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா பரவல் கட்டுப்பாட்டு காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள ஐயப்ப பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்,மேலும் முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம்,அவ்வாறு தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி வழங்க படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version