தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மூத்தத் தலைவரான நரசிம்ம ரெட்டி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான 76 வயதான நரசிம்ம ரெட்டி, நுரையீரல் தொற்று காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரசிம்ம ரெட்டி இன்று அதிகாலை 12.25 மணிக்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரசிம்ம ரெட்டி ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிவதற்கு மிக முக்கியப் பங்காற்றியவர் ஆவார். மேலும், இவர் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நரசிம்ம ரெட்டி மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் தலைமையின் கீழும் பணியாற்றியுள்ளார்.
நரசிம்ம ரெட்டியின் மறைவுக்கு கட்சியின் முக்கியப் பிரமுகர்களும், மாநிலத் தலைவர்களும், தொண்டர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், நரசிம்ம ரெட்டியின் உடலுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செய்யப்படும் என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.