வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: நாளை மறுநாள் கூடுகிறது கேரள சட்டசபை

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தின் சிறப்பு அமர்வு நாளை மறுநாள் கூடுகிறது.

திருவனந்தபுரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள், தங்கள் நலனுக்கு எதிரானவை என்று கருதி அவற்றுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு வட மாநிலங்களை, குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

போராடி வரும் விவசாயிகளின் 40 அமைப்புகளுடன் மத்திய அரசு 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், முடிவு எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்பதில் விவசாய அமைப்புகளும், அதற்கு அழுத்தம் தரவே கூடாது, வேண்டுமானால் திருத்தங்கள் செய்யலாம் என மத்திய அரசும் தத்தமது நிலைப்பாடுகளில் உறுதியாக உள்ளனர். இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. வாட்டியெடுக்கும் குளிர்கூட விவசாயிகளை போராடுவதில் இருந்து தடுக்க முடியவில்லை.

Read more – 11 கையெறி குண்டுகளுடன் வந்த பாகிஸ்தான் டிரோன் : சுட்டு வீழ்த்திய இந்திய பாதுகாப்பு படை

வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தின் சிறப்பு அமர்வு நாளை மறுநாள் கூடுகிறது. கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சட்ட சபை சிறப்பு கூட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

Exit mobile version