ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்ட டாப் 10 பட்டியல்.. பிரதமர் மோடிக்கு எந்த இடம்?

ட்விட்டர் தளத்தில் சர்வதேச அளவில் 2020ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட நபர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் ட்விட்டரில் மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர், பகிரப்பட்ட மற்றும் லைக் செய்யப்பட்ட பதிவு போன்ற விவரங்களை ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சர்வதேச அளவில் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, 2020-ம் ஆண்டு ட்விட்டரில் மக்களால் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர். இந்திய பிரதமர் மோடி 7வது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் இந்தப் பட்டியலில் உள்ள ஒரே பெண் ஆவார். அந்த பட்டியலில் இவர் 10வது இடத்தைப் பெற்றுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா 5வது இடத்திலும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் 9வது இடத்திலும் உள்ளனர்.

அமெரிக்காவில், போலீசாரால் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்ட கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளதால் அவரின் பெயர் 3வது இடத்தில் உள்ளது. உலகெங்கிலும் 2020ல் நடந்த தேர்தல்கள் தொடர்பாக மட்டுமே 70 கோடி ட்வீட்கள் பதிவாகியுள்ளதாகவும், ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version