சிறு நிறுவனங்கள் வளர ரூ.10,000 கோடி நிதி!

புதுடெல்லி: வளர்ச்சித் திறன் கொண்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நேரடிப் பங்கு முதலீடு வழங்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடியில் ‘SME Growth Fund’ அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. உற்பத்தி, சேவை, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் முக்கிய மதிப்புச் சங்கிலித் துறைகளில் செயல்படும் இந்திய நிறுவனங்களை உலகளவில் போட்டியிடும் நிறுவனங்களாக வளர்ப்பதே இதன் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடனா? பங்கு முதலீடா?

இது சிறு நிறுவனங்களுக்கு நேரடியாகக் கடன் அல்லது மானியம் வழங்கும் திட்டமல்ல. நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்யும் வகையில் ‘மாற்று முதலீட்டு நிதி’ எனப்படும் Alternative Investment Fund கட்டமைப்பின்கீழ் இந்த நிதி செயல்படும்.

SME Growth Fund கட்டமைப்பின்கீழ் உருவாக்கப்படும் மாற்று முதலீட்டு நிதிக்கு மத்திய அரசு மொத்தமாக ரூ.10 ஆயிரம் கோடியை வழங்கும். வளரக்கூடிய வாய்ப்பும், செயல்படக்கூடிய வணிக மாதிரியும் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் நீண்டகாலப் பங்கு முதலீடு மேற்கொள்ளப்படும்.

உற்பத்தி நிறுவனங்களுக்கு முன்னுரிமை

இந்த நிதியின் பெரும்பகுதி சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலுள்ள தொழில் குழுமங்களில் செயல்படும் நிறுவனங்களும் முதலீட்டுக்குப் பரிசீலிக்கப்படும்.

தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், நவீனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், புதிய சந்தைகளில் நுழைதல், வெளிநாடுகளுக்கு விரிவாக்கம் செய்தல், பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துதல் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இணைதல் போன்ற தேவைகளுக்கு இந்த நிதி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் புதிய நிதி?

தற்போது செயல்படும் பல பங்கு முதலீட்டு நிதிகள் தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் குறு நிறுவனங்கள் மீதே அதிக கவனம் செலுத்துகின்றன. ஏற்கெனவே செயல்பட்டு வரும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்குச் செல்லத் தேவையான நீண்டகால முதலீட்டைப் பெறுவதில் இடைவெளி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிக் கடன்களைப் போலத் திருப்பிச் செலுத்த வேண்டிய உடனடி அழுத்தமின்றி, நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் நீண்டகால முதலீட்டை வழங்குவதற்காக இந்த நிதி உருவாக்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா?

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தியை விரிவுபடுத்தும்போது உள்ளூர் விநியோகச் சங்கிலிகள் வலுப்படுவதுடன், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என அரசு எதிர்பார்க்கிறது. குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலுள்ள தொழில் நிறுவனங்களுக்கு முதலீடு கிடைத்தால், தொழில் வளர்ச்சி பெருநகரங்களுக்கு வெளியேயும் பரவும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் 2026–27 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யாருக்கு நிதி கிடைக்கும்?

வணிகச் செயல்திறன், வளர்ச்சிக்கான வாய்ப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படலாம். எனினும், விண்ணப்ப முறை, குறைந்தபட்சத் தகுதிகள், ஒரு நிறுவனத்திற்கான முதலீட்டு உச்சவரம்பு மற்றும் திட்டம் நடைமுறைக்கு வரும் தேதி ஆகியவை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எனவே, அனைத்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் உடனடியாக நிதி கிடைக்கும் என்று பொருள் கொள்ளக்கூடாது. விரிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் வெளியான பின்னரே பயனாளிகளுக்கான தகுதிகள் தெளிவாகும்.

Exit mobile version