மத்திய அரசிடமிருந்து ஆம் அல்லது இல்லை என்ற பதிலை மட்டும் விவசாயிகள் எதிர்பார்க்கக்கூடாது : மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்

மத்திய அரசிடமிருந்து ஆம் அல்லது இல்லை என்ற பதிலை மட்டும் விவசாயிகள் எதிர்பார்க்கக்கூடாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. இதனையடுத்து விவசாய அமைப்பினருடன் மத்திய அரசு இன்று 6 ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.

Read more – அதிமுக அரசு வீழ்ந்தே தீரும், அதனை வீழ்த்தும் கருவி மக்கள் நீதி மய்யம் : தமிழக அரசின் மீது கமல்ஹாசன் காட்டம்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதே விவசாய அமைப்பினர்கள் நோக்கமாக கொண்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

விவசாயிகளிடையே சில தவறான சக்திகள் பொய்யான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். நாங்களும் தொடர்ந்து விவசாயிகளிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்,வேளாண் சட்டங்களின் பிரிவு வாரியாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரவேண்டும், விவசாயிகள் வெறுமனே ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற பதிலை மட்டுமே எதிர்பார்க்கக்கூடாது என்று கூறினார்.

மேலும், விவசாயிகள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நமது விவசாயிகள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது எனக்கு மட்டுமல்ல, பிரதமர் மோடி உட்பட அனைவருக்கும் வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version