வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம் : ஹர்சவர்தன்

வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லி :

உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவருகிற கொரோனாவின் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையில், நமது நாடு சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக நமது நாடு கொரோனா வைரசுக்கு எதிராக தீரமுடன் வெற்றிகரமாக போராடிக்கொண்டிருக்கிறது. வளர்ந்த நாடுகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, கொரோனா மீட்பில் உலகளவில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதே அதற்கு சான்று பகர்கிறது.

தற்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டம், முக்கிய கட்டத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்டமாக தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து, அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை சூடுபிடித்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. தடுப்பூசி பணியை குறையேதும் இன்றி சரியாக செய்து முடிப்பதற்கு வசதியாக,  தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 719 மாவட்டங்களில் 285 இடங்களில்  தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் :

தேர்தல் வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது . 719 மாவட்டங்களில் 57 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 96 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.நாட்டில் முதல் கட்டமாக, ஒரு கோடி மருத்துவப் பணியாளா்கள், 2 கோடி முன்கள பணியாளா்கள் என மொத்தம் 3 கோடி பேர்களுக்கு இலவச தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

Read more – தேசிய அளவியல் மாநாட்டில் நாளை துவக்க உரை : பிரதமர் மோடி 

இரண்டாம் கட்டமாக ஜூலை மாதத்திற்குள் 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் உள்ளிட்ட 27 கோடி முன்னுரிமை பயனாளர்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடுவது என்பது குறித்த விரிவான நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.தடுப்பூசி தொடர்பான தவறான வழிகாட்டுதல்களையும் வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம் எனவும் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version