விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் மகனின் கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்தில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் புகுந்தது.
லக்கிம்பூர் கெர்ரி என்ற இடத்தில் உத்தரபிரதேச துணை முதல்வர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் அருகே போராட்டம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வருகை தந்த பாஜக தலைவர்களுக்கும் கருப்புக் கொடி காட்டியதால் விவசாயிகள் மீது வேண்டுமென்றே கார் ஏற்றப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு புகுந்த காரில் இருந்தவர்களை கீழே இறக்கி விட்டு காரை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கார் மோதியதில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 8 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், அருகில் உள்ள விவசாயிகள் ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு வந்து கோஷங்களை எழுப்பினர் என தெரிவித்தனர். ஆனால் அமைச்சரோ விபத்து நடந்த இடத்தில் என் மகன் இல்லை என்பதற்கான ஆதாரங்களை என்னால் காண்பிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.